தலைமை அமைச்சராக நியமிக்கப்பட் டுள்ள மகிந்த ராஜபக்சவை எதிர்ப்பது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. மகிந்த மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்பது என்று முடிவெடுத்ததன் மூலம் ரணிலை ஆதரிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நடுநிலை வகிப்பது என்பது ‘‘அராஜகத்துக்கு’’ வெற்றியீட்டுவதற்கு உதவுவதாக அமைந்துவிடும் என்றும் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுக்கூட்டம் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தது. நீண்ட கலந்துரையாடலின் பின்னர் மேற்படி முடிவை எடுத்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதம்
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசமைப்பின் பிரகாரம் பதவியிலிருக்கும் தலைமை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதற்கான அதிகாரம் அரச தலைவரிடம் இல்லை. 19ஆம் திருத்தத்துக்கு முன்னர் அரச தலைவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19ஆம் திருத்தத்தின் மூலம் திட்டவட்டமாக நீக்கப்பட்டது. தலைமை அமைச்சரை நீக்குவதாகவும், வேறொருவரை நியமிப்பதாகவும் அறிவித்து அரச தலைவர் வெளியிட்ட அரசிதழ்கள் அரசமைப்புக்கு முரணானதும் சட்டவிரோதமானவையுமாகும்.
கூட்டமைப்பு கண்டிப்பு
இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக அரச தலைவர் விடுத்த அறிவிப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களாட்சிக்கு மாறான செயலாகவும் நாடாளுமன்றத்தின் மீயுயர் தன்மையைப் பாதிக்கின்ற செயலாகவுமே நோக்குகின்றது.

