ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் தடவையாக பங்குபற்றும் பங்களாதேஷ், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது முதலாவது வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது.
ஹெமில்டன், சிடன் பார்க் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற மிகவும் பரபரப்பான மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 9 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிகொண்டது.
பர்கானா ஹொக் குவித்த நிதானம் மிகுந்த அரைச்சதம், பாஹிமா காத்துனின் சிறப்பான பந்துவீச்சு என்பன பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்கு வகித்ததுடன் பாகிஸ்தான் சார்பாக சித்ரா அமீன் குவித்த சதம் வீண் போனது.
மகளிர் கிரிக்கெட் அரங்கில் விரைவாக முன்னேறிவரும் பங்களாதேஷ் அணியினர் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புத்தன்மை, அவர்களது துல்லியமான சுழல்பந்துவீச்சு என்பன 234 ஓட்டங்கள் தக்கவைப்பதற்கு உதவின.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 235 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 225 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
எனினும் போட்டியின் ஒரு கட்டத்தில் பங்களாதேஷின் வெற்றியை நோக்கிய எதிர்பார்ப்பு தகர்ந்து விடும் போல் தோன்றியது.
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் சார்பாக முதலாவது சதத்தைக் குவித்த ஆரம்ப வீராங்கனை சித்ரா அமீன், அணித் தலைவி பிஸ்மா மாறூபுடன் இணைந்து பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தார்.
இருவரும் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது பாகிஸ்தானின் வெற்றிக்கு மேலும் 88 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 9 விக்கெட்களும் கிட்டத்தட்ட 13 ஓவர்களும் மீதமிருந்தன.
ஆனால், பஹிமா காத்துன் (38 – 3 விக்.), ருமானா அஹ்மத் (29 – 2 விக்.) ஆகிய இருவரின் துல்லியமான சுழல்பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றத்தை எதிரகொண்டது.
எவ்வாறாயினும் அமீன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்ததால் பாகிஸ்தானுக்கு சிறு நம்பிக்கை இருந்தது. ஆனால் 48ஆவது ஓவரில் அவர் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனதும் பங்களாதேஷ் வீராங்கனைகளின் முகங்கள் பிரகாசம் அடைந்தது.
சித்ரா ஆமின் 104 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஆரம்ப விக்கெட்டில் நஹிதா கான் (43) என்பவருடன் 91 ஓட்டங்களையும் 31 ஓட்டங்களைப் பெற்ற பிஸ்மா மாறூபுடன் 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.
ஆனால், ஏனைய வீராங்கனைகள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதால் பாகிஸ்தானுக்கு அருகில் வந்த வெற்றி விலகிச் சென்றுவிட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்ப வீராங்கனைகளான ஷமிமா சுல்தானா (17), ஷார்மின் அக்தார் (44) ஆகிய இருவரும் ஆட்டமிழக்க பங்களாதேஷின் மொத்த எண்ணிக்கை 20ஆவது ஓவரில் 79 ஓட்டங்களாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த பர்கானா ஹொக், அணித் தலைவி நிகார் சுல்தானா ஆகிய இருவரும் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷை பலப்படுத்தினர்.
பர்கானா ஹொக் திறமையாக துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்களையும் நிகார் சுல்தானா 46 ஓட்டங்களையும் பெற்றனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]