தற்போது குடும்ப ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம். குடும்ப ஆதிக்கமே ஆட்சியில் கோலோச்சியுள்ளது. அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (14.03.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து, டொலரின் பெறுமதி அதிகரித்துவருவதால் நாளாந்தம் பொருட்களின் விலை உயர்வடைகின்றது. இதனால் நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவருகின்றனர். எரிபொருளுக்கு பெரும் தட்டுப்பாடு, போக்குவரத்துறைகூட ஸ்தம்பித்துள்ள நிலை. அதுமட்டுமல்ல சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களை வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டிய பேரவலம்வேறு,
எனினும், நாட்டை மீட்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு அரசு, நிபுணர்களின் ஆலோசனைகளை உள்வாங்கவில்லை. அது தொடர்பில் ஆட்சியாளர்கள் அலட்டிக்கொள்ளமாட்டார்கள். எனவே, இந்த அரசை விரட்டியடித்தால்தான் நாட்டு மக்களுக்கு விமோசனம் கிட்டும்.
தேசிய அரசமைக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கூறவில்லை .மாறாக தேசிய வேலைத்திட்டம் பற்றியே அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நாட்டில் குடும்ப ஆட்சியே நிலவுகின்றது. அங்கு பிறரின் கருத்துக்கு இடமில்லை. அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர். குடும்ப ஆட்சி நடக்கும் சூழ்நிலையில் தேசிய அரசு சாத்தியப்படாது. குடும்பத்தின் திட்டங்களே அமுல்படுத்தப்படும்.
போர் நடைபெறும் உக்ரைனில் வாழும் மக்களைவிட, இலங்கைவாழ் மக்கள் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டத்தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமைமா கிடைக்குமா என்பது சந்தேகமே. ” – என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]