இலங்கைக்கு போர்த்துக்கேயரும் மறைமாவட்டமும் வர முன்னரே வரலாற்று இந்து ஆலயங்களான திருக்கோணேச்சரமும் திருக்கேதீச்சரம் இருந்ததாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நேற்று(19.10.2022) இடம்பெற்ற திருக்கோணேச்சர மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் வரலாறு கொண்ட ஆலயம்
அவர் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை இறைவனுடைய சொரூபம் மலை அடிவாரத்தில் அலை மோதும் போது ஓம் என்ற ஒலி மேல் எழுவது கோணேஸ்வர ஆலயத்தின் மகிமையை எடுத்துக்காட்டுகிறது.
திருக்கோணேஸ்வர ஆலயத்தை உள்ளடக்கிய மலை இயற்கை துறைமுகம் அதனை சூழ உள்ள பகுதிகள் உலகில் எங்கும் காண முடியாத அதிசயங்களில் ஒன்றாக வழங்குகிறது.
அவ்வாறே திருக்கேதீஸ்வர ஆலயமும் பழம்பெரும் வரலாற்றை கொண்ட சிவ ஆலயமாக விளங்குகின்ற நிலையில் இரு ஆலயங்களையும் சகல இனத்தவர்களும் சென்று வழிபாடு செய்வது சிறப்பானது.
இரு ஆலயங்களில் வரலாறுகளை எடுத்து நோக்கும் போது வரலாற்று துறை சார்ந்தவர்கள் மட்டும்தான் ஆய்வு செய்ய வேண்டும் என்பது நியதி அல்ல.
ஆய்வு நூல் வெளியீடு
யாழ்.பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற எந்த பீடங்கள் ஆனாலும் திருக்கேதீஸ்வரம் மற்றும் திருக்கோணேஸ்வர ஆலயத்தை ஆய்வு செய்யக்கூடிய அளவு வரலாற்று பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்ட ஆலயங்களாக வழங்குகின்றது.
ஆகவே குறித்த இரு ஆலயங்களின் வரலாறுகளை ஆய்வு நூலாக எழுதியுள்ள முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியரும் யாழ்.பல்கலைக்கழகத்தின் முனைவருமான பத்மநாதன் அவர்களை வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.”என தெரிவித்துள்ளார்.