போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது.
இன்று(திங்கட்கிழமை) இந்த போச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபடும் ரயில் தொழிற்சங்கத்தினர் மற்றும் கடந்த தினங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனைய தொழிற்சங்கத்தினருடன் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, ரயில்வே தொழிற்சங்கங்களின் தொழிற்சங்கப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்களே இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் ரயில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவர, ஓய்வுபெற்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
20 ஓய்வுபெற்ற அதிகாரிகள் இதுவரை சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

