போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதோடு சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகக் குழுவினரையும் முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் எமது அரசில் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
நீர்கொழும்பு கோல்டன் ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .
“இலங்கையின் பொருளாதாரத்தில் பெண்களே பெரும் பலமாவர். அவர்களது பொருளாதார பலம் உயர்வடையும்போது குடும்பத்தின் பொருளாதார நிலைமை பலமடைவதோடு மாத்திரமின்றி அவை முழு நாட்டினதும் பொருளாதாரத்துக்குப் பலமாக அமையும்.
குடும்பப் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கான பிரதான பொறுப்பு பெண்களையே சாருகின்றது. அதனைத் தெரிந்துகொண்டு மஹிந்த ராஜபக்ச அரசு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ‘திவிநெகும’ உள்ளிட்ட வேலைத்திட்டங்களை செயற்படுத்தி முழு இலங்கையின் பெண்களது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வாறான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் எமது அரசில் முன்னெடுக்கப்படும்.
நாட்டில் போதைப் பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு தாய்மாரினதும், மனைவிமாரினதும் பிரார்த்தனையாகவுள்ளது. அவர்களது பிரார்தனைக்கேற்ப அதனை முற்றாக ஒழிப்பதோடு, சுதந்திரமான வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள பாதாள உலகக் குழுவினரையும் முழுமையாக இல்லாதொழிப்பதற்கும் எமது அரசில் துரிதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருந்தாலும் அவற்றை நாட்டுக்குப் பொரு த்தமான வேலைத்திட்டமாகவே முன்னெடுப்பதற்கு அரசு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதோடு விவசாயத்துக்கும் முன்னுரிமையளிக்கப்படும்.
நாட்டின் எதிர்கால சந்ததியினரான சிறுவர்களுக்கு எவ்வித தடையும் இன்றி சுதந்திரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவதோடு வெவ்வேறு பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ள மாணவர்களுக்கு பாதுகாப்புடனான சூழலில் கல்வியைப் பெற்றுக் கொடுக்க எமது அரசில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .