புதிய அரசமைப்பு உருவாக்கப்படுவதன் ஊடாக இலங்கை பொருளாதார ரீதியில் நன்மையடைய முடியும் என்று இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக கடமையாற்றி பிரியாவிடை பெற்றுச் செல்லும் தூதுவர் அதுல்
கெசாப் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றுச் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
–
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் நிறைவேற்றப்படுவதில் அரசு மிகத் தாமதமான நகர்வுகளை கையாள்கின்றது. பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவித ஆரோக்கியமான நகர்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை.புதிய அரசமைப்பு உருவாக்க விடயத்தில் தற்போது நிலவும் தாமதங்களுக்கான நியாயபூர்வமான எந்தவொரு காரணத்தினையும் எம்மால் இனங்காண முடியாதுள்ளது. பன்னாட்டுச் சமூகத்திற்கு அரசு வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை மக்களின் நலனை அடிப்படையாக கொண்ட பன்னாட்டுச் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை இலங்கை அரசு முழுமையாக நிறைவேற்றாமல் இருக்கின்றது.
ஒரு புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்ற போது அரசமைப்பின் மூலமாக நாட்டில் உள்ள அனைவரும் நன்மையடைவார்கள். இதனை சரியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய கடமை தலைமைகள் அனைவருக்கும் உள்ளது. அரசமைப்பை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவது கடினமான விடயமல்ல.
வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் பிரிபடாத, பிரிக்க முடியாத இலங்கை நாட்டுக்குளேயே தீர்வொன்றை எதிர்பார்க்கிறார்கள், எவ்வாறெனினும் எண்ணிக்கையில் பெருமளவில்லாத குரலெழுப்பும் சிலர் ஒரு தீவிரமான போக்கைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அடிப்படை வாதிகளை அமைதிப்படுத்துவதற்காகவும் அவர்கள் சமூகத்திலே கொண்டு வரக்கூடிய எதிர்மறையான விளைவுகளையும் தடுப்பதற்குமுள்ள ஒரே வழிமுறை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதேயாகும். எமது கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை.
அரசு இவற்றை நிறைவேற்ற முடியாமல் போகும் பட்சத்தில் தமிழ் மக்கள் ஒருபோதும் இந்த நாட்டில் இரண்டாந்தர குடிமக்களாக வாழமாட்டார்கள் – என்றார்.
அதுல் கெசாப் சந்திப்பில் குறிப்பிட்டதாவது-,
அமெரிக்காவை பொறுத்தவரையில் ஐ.நா. மனித உரிமை சபையின் தீர்மானமானது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இரு நாட்டினதும் பல்வேறு உறவுகளுக்கு இது அடிப்படையாதொன்று. நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு நாட்டின் குறிக்கோள்கள் சாதகமானவையாக காணப்படவேண்டும்.
பன்னாட்டு அரங்கில் இலங்கை பெற்றுள்ள நன் மதிப்பினை அலட்சியமாக எடுத்துவிடக்கூடாது. புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்ற போது இலங்கை அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர்வது மாத்திரமல்லாது பொருளாதார ரீதியில் பெரிய நன்மைகளை அடைய முடியும். அமெரிக்கா இலங்கையின் முன்னேற்றம் தொடர்பில் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டினை கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவரோடு அமெரிக்க தூதரகத்தின் பிரதி பிரதானி ரொபேர்ட் ஹில்டனும் அரசியல் பிரிவிற்கான உத்தியோகத்தர் ஜோயன்ன பிரிசெட்சனும் கலந்து கொண்டிருந்தனர்.

