அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகள் காரணமாக நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுவதாக ஒரு கருத்துருவாக்கத்தை கட்டியெழுப்ப சர்வதேச சக்திகள் முயற்சிப்பதாகவும், நாட்டின் இன்றைய பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக அதனை சாதகமாக பயன்படுத்தி சர்வதேச தரப்பு தலையிட்டு நாட்டை துண்டாடும் நிலைமை உருவாகும் எனவும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.
உள்ளக ரீதியில் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதன் மூலமாக மட்டுமே இலங்கைக்கு எதிரான சர்வதேச தலையீடுகளை தடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 27/2இன் கீழ் சிறப்பு கூற்றொன்றை முன்வைத்த போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதாக தெரிவித்து கனடாவில் ஒன்டாரியோ பிராந்திய பாராளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் என்ற சட்டமூலம் ஒன்றினை கொண்டுவந்து அதனை நிறைவேற்ற மூன்றாம் வாசிப்பிற்கு விடப்பட்டுள்ளது.
இலங்கையை பொறுத்த வரையில் நாட்டில் பொருளாதார ரீதியாக மட்டும் அல்ல அரசியல் ரீதியிலும் ஸ்திரமற்ற நிலைமையே காணப்படுகின்றது. இந்த நிலைமையில் ஜனநாயகத்திற்கும் கேள்வி எழுந்துள்ளது. முன்னைய ஆட்சியின் போதும், இந்த ஆட்சியிலும் கூட மாகாணசபை தேர்தலை பிற்போட்டு நீண்ட காலமாகின்றது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் பிற்போட்டுள்ளனர். இவ்வாறு அரசாங்கம் செயற்படும் காரணத்தினால் இலங்கையில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக கூறி உலகம் முழுவதும் மக்கள் கருத்தொன்றை உருவாக்க அடிப்படைவாத குழுக்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆளுநரின் கீழ் இயங்குகின்றது என்பது மிக மோசமான செயற்பாடாகும். ஒரு சில மாதங்கள் அவ்வாறு இயங்குகின்றது என்றால் பரவாயில்லை. பல ஆண்டுகளாக இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது. இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையின் போதும் சர்வதேச தலையீடுகளை கொண்டு நாடு துண்டாடப்படும் நிலைமையை உருவாக்கும்.
தற்போதய நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலைமையில் யுத்தத்தினால் பெற்றுக்கொள்ள முடியாத விடயங்களை சர்வதேச தலையீட்டில் செய்துகொள்ளும் வாய்ப்புகள் இவர்களுக்கு உருவாகியுள்ளது.
அரசாங்கம் இப்போதும் இந்தியாவிற்கு அடிபணிய ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக இந்தியா முன்வைக்கும் அரசியல் அல்லது வேறு எந்தவொரு யோசனைக்கும் அடிபணியும் அச்சுறுத்தல் நிலை உருவாகிக்கொண்டுள்ளது.
வடக்கு கிழக்கில் யுத்தத்தை தோற்கடித்த பின்னர் அபிவிருத்தி குறித்து சிந்தித்ததை தவிர வேறு எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.
மத்திய அரசாங்கத்தினால் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் வடக்கு மக்கள் மனங்களில் சென்றடையவில்லை. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. உதாரணமாக காணி பங்கீட்டின் போதும் நிலங்களை இழந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.
இன்றும் வடக்கில் மிகப் பாரிய அளவில் பொருளாதார நெருக்கடி நிலையொன்று காணப்படுகின்றது. இலங்கையில் ஏனைய பகுதிகளிலும் இந்த நிலை காணப்பட்டாலும் கூட வடக்கை தனியாக அடையாளப்படுத்தி அதிலும் இனவாத பிரசாரங்களை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனவே இவ்வாறான நிலைமைகள் உருவாக முன்னர் துரித நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் செயற்பட வேண்டும். உள்ளக ரீதியில் முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாலும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதன் மூலமாக மட்டுமே கனடா போன்ற நாடுகளின் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க முடியும் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]