“போர்க்கள இரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு உரியவகையில் பதிலடி கொடுக்கப்படும்”என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ‘தெரிவித்தார்.
முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜயசூரிய குற்றமிழைத்துள் ளார் என்றும், அதற்குரிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால் சாட்சியமளிக்கத் தயார் என்றும் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இராணுவம் போர் இரகசியங்களை வெளியிடக்கூடாது. இதுவே இராணுவ மரபாகும். ஒழுக்கமுள்ள தளபதியொருவர் இதற்குக் கட்டுப்பட்டே செயற்படுவார். முன்னாள் இராணுவத் தளபதி போர்க் குற்றச்சாட்டுகள் பற்றி கதைக்கின்றார். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே அவர் இப்படிச் செயற்படுகிறார்.
இருந்தபோதிலும் அவரின் அறிவிப்பு சம்பந்தமாக ஆழமாக ஆராய்ந்து வருகின்றேன். இராஜதந்திரிகள் உட்பட முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன். அந்தப் பணி முடிவடைந்ததும் ஆக்கபூர்வமான முறையில் அறிக்கையொன்று வெளியிடப்படும். அதுவே அவருக்கான பதிலாகவும் அமையும் – என்றார்.