உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றுக்கு, பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) தெரிவித்துள்ளது.
கால்பந்தாட்டத்தின் மன்னன் என வர்ணிக்கப்படும் பேலே, கடந்த வியாழக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார். பேலேயின் இறுதிக்கிரியைகள், அவரின் பிரேஸிலின் சான்டோஸ் நகரில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று அதகாலை) நடைபெற்றன.
இந்நிலையில், பேலேயின் பூதவுடலுக்கு நேற்றுமுன்தினம் நேரில் இறுதி அஞ்சலி செலுத்திய, பீபா தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.
பேலே விளையாடிய கால்பந்தாட்டக் கழகமான சான்டோஸ் கழகத்தின் விலா பெல்மைரோ அரங்கில், அவரின் பூதவுடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. சுமார் 2 லட்சம் மக்கள் அவருக்கு வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
அந்த அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஜியானி இன்ஃபன்டினோ, “கால்பந்தாட்ட அரங்கு ஒன்றுக்கு பேலேயின் பெயரைசூட்டுமாறு உலகிலுள்ள அனைத்து நாடுகளிடமும் நாம் கோருவோம்” எனத் தெரிவித்தார்.
“நாம் மிகுந்த துயரத்துடன் இங்கு உள்ளோம் பேலே நித்தியமானவர். அவர் பூகோள கால்பந்தாட்டத்தின் சின்னம்” என ஜியானி இன்ஃபன்டினோ கூறினார்.
3 உலகக்கிண்ணங்களை வென்ற உலகின் ஒரேயொரு வீரரான பேலே தனது 21 வருட கால்பந்தாட்ட வாழ்க்கையில், 1,366 போட்டிகளில் 1,283 கோல்களைப் புகுத்தியும் கின்னஸ் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.