பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான விநியோகஸ்தரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்திருப்பதாக மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நேற்று(31) பிணைமுறி ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.
பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் சசின் தேவதந்திரியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கடந்த நாட்களில் விசாரணை செய்திருந்ததுடன், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் நேற்று(31) பிணைமுறி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவரிடம், தொலைபேசி அழைப்புக்களை பதிவு செய்யும் கட்டமைப்பு குறித்து விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அவர், பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான விநியோகஸ்தரான நுவன் சல்காது என்பவர் சுமார் 1,520 தொலைபேசி அழைப்புக்களின் பட்டியலை வழங்கி அதனை கட்டமைப்பில் இருந்து அழித்து விடுமாறு கூறியதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அழிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டீ.வீ.டீ. க்களை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் சசின் தேவதந்திரியிடம் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதான விநியோகஸ்தரான நுவன் சல்காது என்பவரை உடனடியாக கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.