ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
பாராளுமன்றத்தின் ஊடாக இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் வேட்பு மனுத்தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதுடன், இரகசிய வாக்கெடுப்பு கடந்த புதன் கிழமை இடம்பெற்றது.
புதிய ஜனாதிபதி தெரிவில் பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் டலஸ் அழகப்பெரும போட்டியிடுவதாக அறிவித்தார்.இவ்வாறான நிலையில் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து பிற தரப்பினருக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது,என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கடந்த கேள்வியெழுப்பியிருந்தார்.
ஜனாதிபதி தெரிவில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளமை தொடர்பில் விளக்கமாறும் 06 விடயங்களுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தி தவிசாளர் ஜி.எல் பீரிஸ் கடந்த 16ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் பொதுசெயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தார்.
புதிய ஜனாதிபதி தெரிவிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை ரணில் விக்கிரமசிங்க,டலஸ் அழகபெரும மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ டலஸ் அழகபெருமவின் பெயரை முன்மொழிந்தார்,அதனை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் உறுதிப்படுத்திளார்.
கட்சி உறுப்பினர் ஒருவர் போட்டியிடுகையில் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது நியாயமானது அதன் அடிப்படையில் தான் எதிர்க்கட்சி தலைவரின் முன்மொழிவை உறுதிப்படுத்தினேன் என பேராசிரியர் ஜி.எல் பீரிஷ் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு அவருக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை என தவிசாளர் ஜி.எல் பீரிஸ் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் முன்மொழிவை பொதுஜன பெரமுனவின் தவிசாளர் உறுதிப்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஷ் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் கல்வி மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஜி.எல் பீரிஸ் ஓரங்கப்பட்டுள்ளார்.வெளிவிவகாரத்துறை அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.