நாவலப்பிட்டி – லக்சபான பகுதியில் தனது பேரனை தீண்டிய நாகப்பாம்பை பிடித்துக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடிய தாத்தாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லக்சபான பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை நாகப்பாம்பு ஒன்று தீண்டியுள்ளது.
பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் குறித்த சிறுவன் அவனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்துள்ளான்.
இதில் பாதிக்கப்பட்ட சிறுவன் அயலவர்களின் உதவியுடன் லக்சபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையில் தனது பேரனை தீண்டிய பாம்பு இருந்தால் பேரனுக்கு வைத்தியம் பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும் என நினைத்த தாத்தா குறித்த பாம்பை பிடித்து கம்பியால் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளார்.
மிகவும் பரபரப்புடன் காணப்பட்ட முதியவர், அவர் பிடித்த பாம்பை அப்படியே கைகளில் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதனால் லக்சபான வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகைத்தந்த நோயாளர்கள் உட்பட பொதுமக்கள் என அனைவரும் முதியவரின் செயலைக்கண்டு பயந்து ஓட்டமெடுத்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் லக்சபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.