இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்துள்ள 18 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலை அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் கொழும்பு ஸாஹிரா, யாழ். மத்திய, கொழும்பு புனித சூசையப்பர் (SJC), கொழும்பு ஹமீட் அல் ஹுசெய்னி (HAH) ஆகிய கல்லூரிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற கடைசி இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் புனித சூசையப்பர் கல்லூரியும் ஹமீட் அல் ஹுசெய்னி கல்லூரியும் வெற்றிபெற்றன. இரண்டு யாழ். கல்லூரிகளான புனித பத்திரிசியார் கல்லூரியும் இளவாழை புனித ஹென்றியரசர் கல்லூரியும் பெனல்டி முறைகளில் தோல்வியுற்று ஏமாற்றம் அடைந்தன.
புனித சூசையப்பர் அணிக்கும் புனித பத்திரிசியார் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டி 1 – 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் வெற்றி அணி பெனல்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது.
இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட அப் போட்டியில் புனித பத்திரிசியார் அணி வீரர் ஏ. ஜெரூஷன் 68ஆவது நிமிடத்தில் கோல் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.
ஆனால் அடுத்த 5ஆவது நிமிடத்தில் புனித சூசையப்பர் வீரர் ஆர். சுதாரக்க கோல் நிலையை சமப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றி கோலுக்காக எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதனை அடுத்து வழங்கப்பட்ட பெனல்டிகளில் 3 – 1 என புனித சூசைப்பர் வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
அதற்கு முன்னதாக நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில் இளவாழை புனித ஹென்றியரசர் அணியை எதிர்த்தாடிய ஹமீட் அல் ஹுசெய்னி அணி 6 – 5 என்ற பெனல்டிகளில் வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
அப் போட்டியின் முதலாவது பகுதியில் சிறப்பாக விளையாடிய புனித ஹென்றியரசர் அணி 23ஆவது நிமிடத்தில் ஏ. பெசில் போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது.
இடைவேளையின் பின்னர் 63ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசெய்னி சார்பாக எம். ஹுசெயன் கோல் நிலையை சமப்படுத்த போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியது.
அதன் பின்னர் எந்த அணியும் வெற்றி கோலை போடத் தவறியதால் ஆட்டம் 1 – 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டிகளில் 6 – 5 என ஹமீத் அல் ஹுசெய்னி வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதிப் போட்டிகள் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதியும் 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டி மற்றும் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் போட்டி என்பன மார்ச் 5ஆம் திகதியும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.