கோனாபீனுவல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது கணவனால் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கோனாபீனுவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கோனாபீனுவல, வடுகொட பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் முன்னாள் இராணுவ அதிகாரி ஆவார், அவர் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்சமயம் மீனவராக தொழில் புரிந்து வருகிறார்.
சந்தேக நபர் தனது மனைவி பணிக்கு சென்றிருந்த நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பியதாகவும், அவர் வீடு திரும்பிய பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து சந்தேக நபர் பெண் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளார். அந்த பெண் தீயை அணைக்க முயன்ற போதிலும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. பின்னர் அயலவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து தீயை அணைத்துள்ளனர்.
பின்னர் அவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் அம்பியூலன்ஸின் உதவியுடன் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்.
சந்தேக நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பலப்பிட்டிய நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக பெப்ரவரி 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]