அரசியலில் பிரவேசித்துப் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசக்கூடிய தகுதியைப் பெண்கள் பெற வேண்டும். பெண்களுக்கு அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு பெண்கள் கட்சி என்ற ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்றுக் கூட்டாக வலியுறுத்தினர்.
மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநதித்துவம் ஏன் அதிகரிக்க வேண்டுமென்ற தொனிப்பொருளில் பெண்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப்பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதில் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி விசாகா தாம்தாச அதில் கலந்து கொண்டார். பெண்களின் பிரதிநித்துவம் ஏன் அதிகரிக்கப்பட வேண்டும்?, தேர்தலில் பெண்களின் பங்களிப்புக்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்களைத் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது பெண்களின் பங்களிப்பு 23 வீதமாக இருந்தது. எதிர்வரும் காலங்களில் 50 வீதமாக வழங்கப்பட வேண்டும். ஆண்களால் 100க்கு 100 வீதம் அரசியலில் பங்களிப்புச் செய்ய முடியுமெனின் ஏன் பெண்களால் 100க்கு 100 வீதம் பங்களிப்புச் செய்ய முடியாது.
திருமணமானவராயின் கணவனின் அனுமதியுடனும், குடும்பத்தாரின் ஒத்துழைப்புடனும், அரசியலில் பிரவேசிக்க வேண்டும். பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசக்கூடிய தகுதியைப் பெற வேண்டும். பெண்கள் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும். பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்குப் பெண்கள் கட்சி என்ற ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
வடக்கு மாகாண பெண்கள் தமது பிரச்சினைகளையும், அரசியல் பங்களிப்யையும் முன்னெடுக்க உருவாக்கிய அமைப்பின் ஊடாக இன்னும் பெண்கள் மத்தியில் அரசியல் ஆர்வத்தையும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் பிரச்சினைகளை அறிந்து ஆராய்ந்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியலில் பெண்களின் பங்களிப்புக்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
அதற்குரிய வாய்ப்புக்களை பெண்களுக்கு வழங்க ஆண்கள் முன்வர வேண்டும், கட்சிகள் முன்வர வேண்டும் என்று கலந்துரையாடலில் கலந்து கொண்ட பெண்கள் சுட்டிக்காட்டினர்.
எதிர்காலத்தில் பெண்கள் கட்சிகள் உருவாக்கப்பட்டு பெண்களின் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்புக்களை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்லும் வகையில் செயலாற்ற பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமென்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கேசவன் சயந்தன், அஸ்மின் அயூப் க.சிவயோகன் ஆகியோர் கலந்துகொண்டு பெண்களின் பிரதிதிநித்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் பெண்களின் பங்களிப்புக்கள் தொடர்பான தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். வடக்கு மாகாணத்தைகச் சேர்ந்த பெண்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் பெண் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

