புளொட் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சியாக இயங்குவதால் அவர்களை எந்தக் காலத்துக்கும் நாங்கள் தமிழ் மக்கள் முன்னணியில் இணைக்கமாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற எண்ணமும் எமக்குக் கிடையாது.
– – இவ்வாறு ஆணித்தரமாகவும், உறுதியாகவும், தெளிவாகவும் தெரிவித்தார் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
தமிழ் மக்கள் முன்னணியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
எமது கட்சி கொள்கை ரீதியாகப் பயணிப்பது. கொள்கைசார்ந்து இருப்பவர்கள் எவரும் எமது கட்சியில் இணையலாம். சித்தார்த்தன் பிறிதொரு கட்சியாகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளார். சுரேஷ் பிரேமச்சந்திரனா அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ பல வருடங்களுக்கு முன்னரே – எமது கட்சி ஆரம்பிக்கப்பட முன்னரே – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவர்கள். ஆகையால் அவர்கள் எமது கட்சியில் இணைந்து கொள்ளலாம்.
ஆனால், புளொட் அமைப்பு தற்போது வரையும்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவக் கட்சியாக இருக்கின்றது. அந்தக் கட்சியை உடைக்கின்றவேலையை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். ஆகையால் சித்தார்த்தன் வந்தால்கூட நாம் அவரை ஏற்கமாட்டோம். – என்றார்.
அதன்போது, ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்புகையில் –
தேர்தல் காலத்தில் புளொட் அமைப்பு உங்களுடன் இணைவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா என்றமைக்கு, விக்கி, ஒருகாலமும் அவ்வாறு இணைய சந்தர்ப்பம் இல்லை – என்றார்.

