நல்லூரில் உள்ளதியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியை துணிந்து திறந்து வைத்தமையால் நான் சுடப்பட்டு, இந்தியாவுக்குப் பாதுகாப்புக் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டேன், மாநகர சபை ஆணையாளர் பதவியை இழந்தேன். இப்போது தாங்கள்தான் ‘புலி வாரிசு’ எனக் கூறிக்கொண்டுதிரிபவர்கள் அப்போது இந்த மண்ணில் பிறந்திருக்கக்கூடமாட்டார்கள். வரலாறுகள் மழுங்கடிக்கப்படக் கூடாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிகையில் –
வடக்கு மாகாணசபை ஆட்சி யில் இருந்தபோதே நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியைஎல்லையிட்டு பராமரிக்க வேண்டும் என மாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன்.அந்தக் கடிதத்தில் திலீபனின் தூபி உள்ள இடத்தில் பத்து அடி பகுதியை எல்லையிட்டு பாதுகாப்பு சுற்றுவேலியை அமைக்குமாறு கோரியிருந்தேன்.
ஆனால், முன்னாள் முதலமைச்சர் எனது கோரிக்கையை நிராகரித்து நினைவுத் தூபி தவிர்ந்த நான்கு அடிப்பகுதியை சுற்றி எல்லை வேலி அமையுங்கள். நினைவுத்தூபியில் எவ்வித முன்னேற்றங்களையோ அபிவிருத்திகளையோ செய்வதை தடுக்கும் வகையில் பதில் கடிதம் ஒன்றை எனக்கு எழுதியிருந்தார். ஏன் அவ்வாறு பதில் எழுதினார் என்று எனக்குவிளங்கவில்லை,
1988 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபி மீள புனரமைக்கப்பட்டு என்னால் திறந்து வைக்கப்பட்டது. அவ்வாறு திறந்து வைக்கப்பட்ட நான்கு நாள்களில் எனது அலுவகலத்தில் வைத்து என் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டது. இதனால் இந்திய அமைதி காக்கும் படையினர் பாதுகாப்புக் கைதியாக என்னை இந்தியாவுக்குக் கொண்டுசென்றுவிட்டனர். பின்னர் சில காலம் கழித்து இலங்கை வந்தபோதும் ஆணையாளர் பதவியில் – அரச உத்தியோகத்தில் என்னால் பணியாற்ற முடியவில்லை .எனது வேலையை இழந்தேன். அப் போது எனக்கு வயது 50.இதனால் ஓய்வூதியத்தைப் பெற முயற்சிகளை எடுத்தேன். இதனால் எனது குடும்பத்தைக் கூட கொண்டு நடத்துவதில் மிகுந்த சிரமப் பட்டேன்.
தியாகதீபம் திலீபன் உயிருடன் இருந்த காலத்தில் கூட நான் அவருடன் நேரடியாகப் பேசியிருக்கிறேன். திலீபனின் வரலாறுகள், தியாகங்கள் இடம் பெற்று 30 வருடங்களாகிவிட் டன. இப்போது தாங்கள்தான் ‘புலி வாரிசு’ என கூறிக்கொண்டு திரிபவர்கள் அப்போது இந்த மண்ணில் பிறந்திருக்கமாட்டார்கள் அல்லது அவர்களுக்கு திலீபனை யார் என்று கூடத் தெரிந்தி ருக்குமோ தெரியவில்லை .
திலீபனின் தூபியை அன்றைய காலத்திலேயே துணிந்து நின்று திறந்துவைத்தவன் நான். அதனால் 60 வயதில் ஓய்வுபெற வேண்டிய நான் ஐம்பது வயதிலேயே ஓய்வுபெறவேண்டிய சூழல் கூட ஏற்பட்டது. இவ்வாறு ஆரம்ப கால வரலாற்றுடன் நேரடியாக தொடர்புபட்டவன் என்ற அடிப்படை யில் வரலாறுகள் மறைக்கப்படக்கூடா என்பதாலேயே யாழ்ப்பாணம் மாநகர சபை இதனைப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரினேன்-என்றார்.