முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மேலதிக பாதுகாப்பு அளித்து அவரைப் பாதுகாக்க வேண்டிய நோக்கம் தங்களுக்கு கிடையாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமா திலங்க சுமத்திபால இவ்வாறு கூறியுள்ளார்.
வன்முறைகள் இருந்த காலத்திலும் அதேபோல போர்க் காலத்திலும் இல்லாத அச்சுறுத்தலா அவருக்கு இப்போது ஏற்பட்டுள்ளது எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“விடுதலைப் புலிகளின் காலத்திலும் ரணில் விக்ரமசிங்கவுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்கவில்லை. விஜேவீர இருக்கும்போதும் அவருக்கு அச்சுறுத்தல் இருக்கவில்லை. அவர்மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டிருக்கவில்லை.
அதனாலோ தெரியவில்லை அவர் விசேட பாதுகாப்புக்கு மத்தியில் இருந்துவந்துள்ளார். அவரை அக்காலத்தில் கொலை செய்யவும் யாரும் முயற்சிக்கவில்லை. 88, 89களிலும் அவருக்குப் பிரச்சினை இருக்கவில்லை.
பிரபுக்களின் பாதுகாப்பு குறித்த முடிவுகளை பொலிஸ்மா அதிபரே மேற்கொள்வார். குறிப்பிட்ட நபருக்கு இருக்கின்ற அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டே அவருக்கான பாதுகாப்பு எல்லையும் தீர்மானிக்கப்படும்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு அச்சுறுத்தல் இருந்து பாதுகாப்பை விலக்குமாறு நாங்கள் கோரினால் அதற்கான பொறுப்பினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
4 வருடங்களுக்கு முன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கான பாதுகாப்பினை நிபந்தனையற்ற வகையில் வழங்க வேண்டும் என்பதை இந்த இடத்திலிருந்து நான் தெரிவித்திருந்தேன்.
அதனால் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் கடந்த காலங்களில் எடுத்த தீர்மானங்களால் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருக்கலாம். அதனால் அவரிடமிருந்து பழிவாங்கவும் முடியாது.
எனினும் அதிக எல்லையற்ற பாதுகாப்பை ரணிலுக்கு கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. அவரைப் பாதுகாக்க முடியாது.
எனினும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில் அதனை நாங்கள் தடுக்கவும் போவதில்லை. ஆனால் ரணில் விக்ரமசிங்கவுக்கு அச்சுறுத்தல் என ஏதாவது இருந்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்தே உருவாகும்” என்றார்

