இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள எமது உறவுகள் இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவிகளை வழங்கப் போவதாக தமிழக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்தார். நாங்கள் அதனை வரவேற்கின்றோம். ஆனால் பொருளாதார நெருக்கடியினால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.
எனவே அனைவருக்கும் அந்த உதவிகளை வழங்கினால் நல்லதாக இருக்கும் என நாங்கள் எமது கருத்தினை தெரிவித்திருந்தோம், அதனை செவிமடுத்து இலங்கையில் உள்ள அனைவருக்கும் உதவி வழங்குவதற்கு தமிழக அரசு முன்வந்துள்ளது.
அது ஒரு நல்ல விடயம், அதேபோல புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகளும் அவ்வாறான ஒரு வேலைத்திட்டத்தினை தற்போது நாட்டிலுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு செயற்பட்டால் நல்லதாக இருக்கும்.
எனவே புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்களும் எமது உறவுகளுக்கு உதவிகளை வழங்கினால் நல்லதாக அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]