தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையிலும், புலனாய்வு பிரிவுகளுக்கு மேலும் அதிகாரங்களை அதிகரித்தல் மற்றும் சட்டரீதியாக பாதுகாப்பை அளிக்கும் நோக்கிலும் விசேட சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நல்லாட்சி அரசின் காலத்தில் போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பிணையின்றி புலனாய்வு அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டதைப் போன்று எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காகவே இந்த சட்டமூலத்தை கொண்டுவருவதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்தும் அளித்து இந்த புதிய புலனாய்வுத்துறைச் சட்டமூலம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “நாட்டில் பொருளாதார அபிவிருத்திக்கும், ஐக்கியத்திற்கும், தேசிய பாதுகாப்பு முக்கியமானதாக அமைகிறது.
அதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இந்த நாட்டை பொறுப்பேற்று உரையாற்றியபோது, சிங்களம், தமிழ் உட்பட அனைத்து இன மக்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதற்கான பொறுப்பை ஏற்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் புலனாய்வுப் பிரிவு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. புலனாய்வுப் பிரிவினர் விலைமதிக்க முடியாத சேவையை ஆற்றியிருக்கின்றனர்.
விசேடமாக 30 வருட போர்க்காலத்தில் அதனை முடிவிற்கு கொண்டுவர உயிர்த்தியாகம் செய்துப் பணியாற்றினார்கள்.
துரதிஷ்டவசமாக நல்லாட்சிக்காலத்தில் உன்னத சேவையை ஆற்றிய புலனாய்வுப் பிரிவினரை மிகவும் கோபத்துடன் நடத்திய முன்னுதாரணத்தை கடந்த அரசாங்கம் வழங்கியிருக்கிறது.
புலனாய்வுப் பிரிவினர் பலரும் பிணையின்றி நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததோடு அவர்களுடைய சம்பளமும் வழங்கப்படாத பழிவாங்கலே இடம்பெற்றது.
அதனை இராணுவத்தினரை வேட்டையாடல் என்று கூறினோம்.
இப்படியான நிலைமை எதிர்காலத்தில் உருவாகாதபடி அவர்களுடைய பணிகளைப் பாதுகாக்கவும், சிறப்புரிமைகளை வழங்கவும், அதிகாரங்களை வழங்கவும் புதிய சட்டமூலம் ஒன்று அரச புலனாய்வுச் சட்டமூலம் என்ற பெயரில் அதனை தயாரிப்பதற்கான பணியை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்குவதற்கான யோசனை அமைச்சரவையில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது.

