கடந்த ஆண்டு போலவே இந்தாண்டிலும் பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாடத்தின் போது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தின் போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இளைஞர்கள், இளம் பெண்கள் பிரிகேட் ரோடு, எம்.ஜி. சாலை ஆகிய பகுதிகளில் ஒன்றாக கூடி புத்தாண்டை வரவேற்று ஆடிப்பாடினர்.அப்போது கூட்டத்திற்குள் சில இளைஞர்கள் இளம் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். இது பெரும் சர்சசையை ஏற்படுத்தியது.
இந்தாண்டும் இதேபோன்று அசம்பாவித சம்பவங்களை தடுக்க 1500 ஆண் போலீசார் 500 பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையும் மீறி சில இளைஞர்கள் குடி போதையில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். இதற்கான வீடியோவும் வெளியானது. இதில் தம்பதிகளிடம் மர்மகும்பல் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் கண்டும் காணாதது போல் எந்த நடவடிக்கையும், வழக்குப்பதிவும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கூறுகையில், இந்தாண்டு முக்கிய இடங்களில் சிசிடிவி. கேமிராக்கள், டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இதனால் பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டதாக எந்த புகாரும் வரவில்லை. எந்த போலீஸ் நிலையங்களிலும் எப்.ஐ.ஆர்.போடப்பட்டதாக தகவல் இல்லை என்றார்