நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கராச்சியில் இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதத்தைப் பூர்த்தி செய்த டெவன் கொன்வே தனது அணியை ஒரளவு பலமான நிலையில் இட்டுள்ளார்.
இதன் மூலம் புத்தாண்டில் முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்ற வீரர் என்ற பெருமையை டெவன் கொன்வே பெற்றுக்கொண்டார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலனமான நிலையில் இருக்கிறது.
நியூஸிலாந்தின் முதல் 2 விக்கெட்களுக்கான இணைப்பாட்டங்கள் சிறப்பாக அமைந்தபோதிலும் அதன் பின்னர் 5 விக்கெட்கள் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.
டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
கராச்சியில் கடந்த வருட இறுதியில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் குவித்த டொம் லெதம் இப் போட்டியிலும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்களைப் பெற்றார்.
டொம் லெதம் ஆட்டமிழந்த பின்னர் டெவன் கொன்வேயுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 2ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஆனால், அதன் பின்னர் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்தன.
டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 9 பந்துகள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெவன் கொன்வே 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 122 ஓட்டங்களைப் பெற்றார்.
முதலாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் குவித்த கேன் வில்லியம்சன் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அவர்களைத் தொடரந்து ஹென்றி நிக்கல்ஸ் (26), டெரில் மிச்செல் (3), மைக்கல் ப்றேஸ்வெல் (0) ஆகிய மூவரும் ஆட்டமிழந்தனர்.
டொம் பளண்டல் 30 ஓட்டங்களுடனும் இஷ் சோதி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் அகா சல்மான் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நஸீம் ஷா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.