Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் | அலி சப்ரி

September 14, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தற்காலிக மனிதாபிமான நிவாரணமே ஒரு இலட்சம் | நீதி அமைச்சர் சப்ரி

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 

இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனைத் தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி,

“சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அளவுகோல்களின்படியும், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலும், நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் சமநிலையான சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் நீதியமைச்சரின் தலைமையில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, இந்த புதிய சட்டம் சாதகமான மட்டத்தில் திருத்தப்பட்டுள்ளது. 

நமது நாட்டில் சட்டங்களைத் திருத்தவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் ஒரு பொறிமுறை உள்ளது. எனவே அந்த முறைகளுக்கு ஏற்ப இந்த புதிய சட்டம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பிறகு, இந்த சட்டம் குறித்த புரிதலை நாட்டு மக்கள் அனைவரும் பெற முடியும்.

இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற இந்த புதிய சட்டத்தை, இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ விரைவாக வர்த்தமானியில் வெளியிட  எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி, இந்நாட்டு மக்களுக்கு இந்த சட்டம் தொடர்பில் கருத்துவேறுபாடுகள் இருப்பின், ஒரு வாரத்திற்குள் அதை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

உயர் நீதிமன்றத்திற்கு தனியான, விசாரணை நீதிமன்ற அதிகாரம் உள்ளது. அதன் பிரகாரம் உயர் நீதிமன்றம் வழங்கக்கூடிய அறிவுறுத்தல்களின்படி, மேலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. இந்த புதிய சட்டம் ஏற்கனவே உள்ள சட்டத்துடன் ஒப்பிடும்போது மிகவும் முற்போக்கான புதிய விடயங்களுடனேயே திருத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முதன்முதலில் 1979ஆம் ஆண்டு ஆறு மாத காலத்திற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் இந்நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றதன் காரணமாக, இன்றுவரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது தொடர்ந்தும் அமுலில் உள்ள ஒரு சட்டமாக இருக்கின்றது. 

ஆனாலும் 2009 இல் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இந்த சட்டம் தேவையா? என பல்வேறு விமர்சனங்கள் இது தொடர்பில் முன்வைக்கப்பட்டு வந்ததன் காரணமாக, 2017 மற்றும் 2018 இல்,  இந்த சட்டத்திற்கு திருத்தங்கள கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டதுடன், மீண்டும் இந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை வலுவாக அமுல்படுத்த வேண்டும் என்று கருத்துகள்  மேலோங்கின. 

பின்னர், கடந்த கடந்த காலங்களில் இந்த விடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்கள் நடைபெற்ற பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தளர்த்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2021 செப்டெம்பர் மாதத்தில், பொலிஸ் மா அதிபர், பயங்கரவாத செயல்களில் நேரடியாக ஈடுபட்டவர்களைத் தவிர வேறு யாரையும் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது என்று பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தினார். 

இதன்படி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை விகிதாசார அடிப்படையில் குறைந்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், தடுப்புக் காவலில் வைத்திருக்கும் காலத்திற்கு எந்த எல்லையும் இருக்கவும் இல்லை.

ஆனால், இந்த புதிய சட்டத்தின் மூலம் 60 நாட்கள் மாத்திரமே தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடியும். மேலும், அவர்களை சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மாத்திரமே தடுத்து வைக்கவும் முடியும். இந்தப் புதிய சட்டத்திற்கு ஏற்ப ஒருவரைக் கைது செய்த பிறகு, 48 மணி நேரத்திற்குள் நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தி இது தொடர்பில் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும், ஒப்புதல் வாக்குமூலத்தின் (confession) அடிப்படையில் யாருக்கும் வழக்குத் தொடர முடியாது. அவ்வாறு வழக்குத் தொடர வேண்டுமெனில், அது பொதுவான சட்டத்தின்படி நீதிபதியின் முன் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் படியே அமைய வேண்டும்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தயாரிக்கப்பட்டதன் பின்னர், சட்டத்தரணிகள், சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச சமூகம், சிவில் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் என பல்வேறுபட்டவர்கள் முன்வைத்த கருத்துகள் குறித்தும் நாம் அவதானம் செலுத்தினோம்.

அதன்படி, புதிய பரிந்துரைகளுடன் திருத்தப்பட்ட சட்டம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.” என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 

Previous Post

இலங்கை வருகிறது சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு

Next Post

கஜேந்தரன், வினோ தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை

Next Post
நாட்டை கட்டியெழுப்பும் உண்மையான நோக்கம் இருப்பின் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் | செல்வராசா கஜேந்திரன்

கஜேந்தரன், வினோ தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures