புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த “வெள்ளை அறிக்கை”யை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மக்கள் பேரவை இயக்க உறுப்பினர்கள் உள்ளிட்ட 250 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், மதகுருக்கள், சமூக அமைப்புகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் உறுப்பினர்களின் கையெழுத்திட்ட கடிதமொன்றை இன்று வியாழக்கிழமை (28) மக்கள் பேரவை இயக்க உறுப்பினர்கள் உட்பட செயற்பாட்டாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் குழுவினர் நீதியமைச்சரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த மே மாதம் நீதியமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சட்டம் கொண்டுவர வேண்டாம் என குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு பதிலளித்த நீதியமைச்சர், புதிய வரைவு சட்டம் குறித்த “வெள்ளை அறிக்கை” ஒன்றை பொதுமக்களின் விரிவான கலந்துரையாடலுக்காக வெளியிடுவதாக உறுதியளித்திருந்தார்.
எனினும், அண்மையில் வெளிவிவகார அமைச்சர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கும் சட்டமூலம் மற்றும் புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் வரவிருக்கிறது என அறிவித்தார். இதனால், அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
“புதிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கவலைக்குரியது” என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் வர்த்தமானியை வெளியிடும் செயல்முறையை உடனடியாக நிறுத்திவிட்டு, அமைச்சர் அளித்த வாக்குறுதியின்படி பொதுமக்களின் கருத்துக்களுக்கு இடமளிக்கும் வகையில் “வெள்ளை அறிக்கை”யை வெளியிட வேண்டும் என அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கோரிக்கை, அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் பங்களிப்புடன் சட்டங்களை உருவாக்கும் செயல்முறை குறித்த பொது விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



