புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் நாட்டுக்கு ஏற்படும் பாதகங்களைப் பட்டியலிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, நாட்டை ஒன்பது துண்டுகளாகப் பிரித்து சுயாட் சிக்கு சமாந்திரமான அதிகாரங்களை இந்த அரசமைப்பு வழங்கும். அதற்கே தீர்மானித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று புதன்கிழமை விடுத்துள்ள சிறப்பு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,
கடன் தொகையில்
தத்தளிக்கிறது நாடு
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் நான்கு ஆண்டுகள் கடந்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மூன்று விதமான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இந்த நாடு சுதந்திரம் அடைந்த 1948ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை ஆட்சிசெய்த அரசுகள் பெற்றுக்கொண்ட மொத்த கடன் தொகையில் 50 வீதமான கடன்தொகையை கூட்டு அரசு பெற்றுக்கொண்டுள்ளது. எமது அரசு பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்தவே ஐ.தே.க. அரசு கடன்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது. ஆனால், கடந்த அரசின் காலத்தில் பெற்றுக்கொண்ட கடன்தொகை அவ்வாறே இருக்கின்ற சூழலிலேயே இலங்கையின் மொத்த கடன் தொகையில் 50 வீதமான கடன்களை ஐ.தே.க. அரசு பெற்றுக்கொண்டுள்ளது.
2006 – 2014 இடைப்பட்ட காலப்பகுதியில் எமது நாடு பாரதூரமான போருக்கு முகங்கொடுத்தது. 2007ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்திருந்தது. 1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2008, 2009ஆம் ஆண்டில்தான் உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தது. நாமும் அதற்கு முகங்கொடுத்தோம். அதேபோன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு 2006 -2014ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலப்பகுதயில் கனிய எண்ணை பெரல் ஒன்றின் விலை 140 டொலர்கள் வரை உயர்வடைந்திருந்தது.
இவ்வாறு கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் குறித்த காலப்பகுதயில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கையின் ரூபாவின் பெறுமதி 28 ரூபாவால் மாத்திரமே வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் எவ்விதமான பொருளாதார நெருக்கடிகளும் இல்லாது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 53 ரூபாவால் வீழ்ச்சி கண்டுள்ளது.
எமது ஆட்சியில் 7 சதவீதமாகவிருந்த பொருளாதார அபிவிருத்தி தற்போது 3 சதவீதமாக உள்ளது. அதனை தெரிந்துகொண்டுதான் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி நாட்டை மீண்டும் எம்மிடம் கையளிக்க அரச தலைவர் நடவடிக்கையெடுத்தார். ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டது. அடுத்த வாரம், அடுத்த மாதம் பொருளாதாரத்தில் எவ்விதமான பேரிடிகள் நேரிடும் என்று தெரியாதுதான் பயணிக்கின்றோம்.
19 திருத்தச் சட்டம்
அடுத்தபடியாக நாம் முகங்கொடுக்கும் அச்சுறுத்தல்தான் 19ஆவது திருத்தச்சட்டத்தால் முழு அரச பொறிமுறையும் வீழ்ச்சியடையும் நிலைமை. 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று தோல்வியடைந்தாலும், சிம்மாசன உரை தோல்வி கண்டாலும் நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
நாட்டின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக அரச தரப்புக்குள் கருத்து மோதல்கள் வலுப்பெற்றால் தேர்தலொன்றுக்கு அழைப்பு விடுத்து மக்களின் அபிப்பிராயத்தைக் கோருவதுதான் நாடாளுமன்ற சம்பிரதாய முறை. ஆனால், அவ்வாறான சந்தர்ப்பம் 19ஆவது திருத்தத்தில் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதால் அரசும் அதன் உறுப்பினர்களும் ஒரு பொறிமுறையின் கீழ் செயற்படும் நிலமையே காணப்படுகிறது.
1952, 1959, 1964, 2001ஆம் ஆண்டுகளில் அரசுக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளால்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தேவையான சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து மக்களின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியத்துவமானது என்பது எதிர்காலத்தில் புரிந்துகொள்ள கூடியதாகவிருக்கும். 1978ஆம் ஆண்டு அரசமைப்பில் ஆரம்பத்தில் இருந்து கூறப்படும் ஒரு குறைபாடுதான் அரச தலைவர் ஒரு கட்சியிலும், நாடாளுமன்றப் பெரும்பான்மை மற்றொரு தரப்புக்கு இருக்கும் சந்தர்ப்பத்தில் குழப்பகரமான நிலமை தோன்றும் என்பது. 1994ஆம் ஆண்டு மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் எமக்கு சிறந்த முன்னுதாரணங்கள் இருந்தன. நாட்டின் அரச தலைவர் நாடாளுமன்ற தேர்லுக்கு அழைப்பு விடுத்து, அதில் மாற்று தரப்பு நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்ற சந்தர்ப்பங்களில் அரச தலைவர் குறித்த தரப்பின் தலைமை அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்து ஒதுங்கியிருந்தார். ஆனால், இன்று அவ்வாறான சூழலொன்று இல்லை.
பொது தேர்தலொன்றுக்கு அழைப்புவிடுத்து மக்களின் அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசொன்றை அமைத்து நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் முழு பொறுப்பும் 19ஆவது திருத்தத்தில் அரச தலைவருக்குதான் உள்ளது. அரசினதும், அமைச்சரவையினதும் தலைவர் அரச தலைவர்தான். அவ்வாறான அரசில் செய்யப்படும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் அரச தலைவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஐ.தே.க. அரசுக்கு மக்கள் ஆணை இல்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து தேர்தல்களை நடத்துவதை இழுத்தடித்து வருகின்றனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரச தலைவர் ஐ.தே.க. அரசுக்கு ஆட்சியை கொடுத்துவிட்டு ஒதுங்கியிருக்க முடியாது. 19ஆவது திருத்தச்சட்டதால் நாட்டின் முழுமையான அரச பொறிமுறையும் குழப்பகரமானதாக மாறியுள்ளது.
புதிய அரசமைப்பால்
நாடு பிளவடையும்
மூன்றாவதாக எமது நாட்டுக்கு உள்ள அச்சுறுத்தல் அரசமைப்பு நிர்ணய சபை முன்வைக்கவுள்ள புதிய அரசமைப்பாகும். அரசு அதன்மூலம் எதிர்பார்ப்பதாவது கூட்டு ஆட்சி மூலம் நாட்டை ஒன்பது துண்டுகளாக பிரித்து சுயாதீன இராஜ்ஜியங்களுக்கு சமாந்திரமான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாகும். இன்று கொழும்பு அரசிடம் உள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இதன்மூலம் குறித்த மாகாணங்களில் பொலிஸ் அதிகாரத்தை ஏற்படுத்தவுள்ளனர். நெருக்கடியான அல்லது அச்சுறுத்தலான சந்தர்ப்பத்தில் கொழும்பு அரசால் சாதாரண சூழலை குறித்த மாகாணங்களில் ஏற்படுத்த அதிகாரம் இல்லை என்பதுடன், அதனை நாடாளுமன்ற சட்டங்களில் இருந்து விலக்களிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசமைப்பை தயாரிப்பது 19ஆவது திருத்தச்சட்டத்தை தயாரித்து முழு நாட்டையும் சிக்கலான நிலைக்குத் தள்ளியவர்கள்தான்.
இவ்வாறான அரசமைப்பை தயாரிப்பவர்கள்தான் 2017ஆம் ஆண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் முறைமைகளையும் தயாரித்திருந்தனர். மேலே பார்த்துக்கொண்டு தேர்தல் திருத்தச் சட்டங்களை தயாரித்தவர்கள்தான் இன்று குறித்த முறையில் எதிர்காலத்தில் எந்தவொரு தேர்தலையும் நடத்துவதில்லை என்று. இவர்கள் தயாரிக்கும் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் ஒருநாடாகவுள்ள இலங்கையின் எதிர்காலத்தில் இலங்கை ஒரு நாடாக இருக்காது.
இலங்கை என்ற ஒரு நிர்வாகக் கட்;டமைப்பு இருக்காது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம் பணத்தை அள்ளிவீசி உறுப்பினர்களை விலைக்கு வாங்கவுள்ளனர். அதனால்தான் மேற்கூறப்பட்டது போன்று மூன்று அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இந்த மூன்று பாரதூரமான அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை மீட்டெடுக்க எதிர் கூட்டணியான எம்மால் மாத்திரமே முடியும் – என்றுள்ளார்.