கொவிட் தொற்றுக்கு மத்தியில் எவ்வாறான புதிய கொவிட் பிறழ்வுகள் வந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறையினர் தயாராக இருக்கின்றனர். எமது சுகாதார கட்டமைப்பு தொடர்பாக ஒருசிலர் குறைகூறினாலும் எதற்கும் முகம்கொடுக்கும் பலம் எமக்கு இருக்கின்றது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டில் கொவிட் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சுகாதார துறையினர் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் சுகாதார கட்டமைப்பு தொடர்பாக சிலர் விமர்சித்து, சுகாதார துறை பலவீனமடைந்திருப்பதாக காட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறான நிலை ஏற்படமால் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் பலம் எமது சுகாதார பிரிவுக்கு இருக்கின்றது. பயிற்றுவிக்கப்பட்ட சிறந்த நிபுணர்கள் உள்ள சுகாதார அதிகார சபை ஒன்று இருப்பது அதற்கான சக்தி மற்றும் நம்பிக்கை ஏற்படுத்தி வருகின்றது.
அத்துடன் விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட அனைத்து தரப்பினரதும் அர்ப்பணிப்பு, தொற்றை கட்டுப்படுத்த கிடைக்கப்பெற்ற பெரும் சக்தியாகும். புதியவகை தொற்று பரவினாலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை காரணமாக அதன் பரவல் மற்றும் அதன் மூலம் ஏற்படுகின்ற மரணங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியுமாகி இருக்கின்றது.வீடுகளில் சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கை வெற்றியடைந்திருகின்றது. இருந்தபோது தேவையானளவு கட்டில், ஒக்சீஜன் வசதிகள் இல்லை என சிலர் பொய் பிரசாரம் செய்துவருகின்றனர்.
என்றாலும் கொவிட் தொற்றுக்குள்ளாகிய எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் குறைபாடுகள் இல்லாதவகையில், அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், எதிர்காலத்தில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் புதிய வகை தொற்று பரவ ஆரம்பித்தாலும் அதற்கு முகம்கொடுத்து, அதனை கட்டுப்படுத்துவதற்கு எமது சுகாதார கட்டமைப்பு எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கின்றது என்றார்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]