நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எவ்வாறிருப்பினும் பொது மக்கள் கவனயீனமாக செயற்படுவார்களாயின் தென் ஆபிரிக்கா, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைப் போன்ற நிலைமை இலங்கையிலும் ஏற்படும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் ஒமிக்ரோன் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய இதுவரையில் 7 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் வைரஸ் டெல்டாவை விட வேகமாகப் பரவக் கூடியது என்று ஏனைய நாடுகளின் நிலைவரங்களை அவதானிக்கும் போது தெளிவாகிறது.
தென்னாபிரிக்காவில் 10 நாட்களுக்குள் ஒரு மாநிலம் முழுவதும் ஒமிக்ரோன் தொற்று பரவியுள்ளது. அத்தோடு பிரித்தானியாவில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் 75 சதவீதமானோரும், அமெரிக்காவில் 50 சதவீதமானோரும் ஒமிக்ரோன் தொற்றாளர்களாகவே உள்ளனர்.
இலங்கையில் இதே போன்ற நிலைமை ஏற்படலாம். எனவே தான் பொது மக்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
விமான நிலையங்களில் எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் இதுவரை இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மருத்துவ கண்காணிப்பிலேயே உள்ளனர். மருத்துவ அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய சிலர் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]