இலங்கையின் இராஜதந்திரியாக லண்டன் நகரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பிரணாந்து, இலங்கை இராணுவத்தின் காணி, சொத்துக்கள் மற்றும் வீரர்களின் வீடு வசதிகள் என்பவற்றுக்கான பணிப்பாளர் சபையின் புதிய பணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்தப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரியங்க பிரணாந்து தனது பணிகளை நேற்று (10) ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ருவரி 04 ஆம் திகதி இங்கிலாந்தின் லண்டன் நகரில் இலங்கை உயர் ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்களினால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சர்ச்சைக்குரிய சமிக்ஞையின் ஊடாக அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.
இதனால், இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவர் குற்றவாளியாக தீர்ப்பளித்து, அவருக்கு 2400 பவுன்களை தண்டமாக செலுத்துமாறும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

