அனுஷ்கா, பிரபாஸ் இணைந்து நடித்த பில்லா, மிர்ச்சி, பாகுபலி படங்கள் சூப்பர் ஹிட்டானது. ராசியான ஜோடி என்று திரையுலகினரின் பாராட்டு பெற்றிருக்கும் இவர்கள் திருமணத்திலும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கிசுகிசு தீவிரமாக பரவி வருகிறது. இதை இருவரும் இதுவரை உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம், ‘பிரபாஸ், ராணா இருவரில் உங்களை கவர்ந்த ஆணழகன் யார்? என்று கேட்கப்பட்டது. சற்றும் யோசிக்காமல் நிச்சயமாக பிரபாஸ்தான் என்று பதில் அளித்தார்.
‘ராணாவை குறிப்பிடாதது ஏன்?’ என்று கேட்டபோது, ‘அவர் எனது அண்ணன் மாதிரி. சினிமாவை தவிர்த்து நேரில் என்னை தங்கச்சி என்றுதான் அழைப்பார்’ என குறிப்பிட்டார். பிரபாஸ் தற்போது விடுமுறை கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். எந்த நகருக்கு செல்கிறேன் என்பதை ரகசியமாக வைத்திருக்கும் அவர் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘சாஹு’ படப்பிடிப்பிலும் அங்கு பங்கேற்க உள்ளார். விடுமுறை முடிந்து திரும்பிய பிறகு யாருடன் திருமணம் என்பதுபற்றி பிரபாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.