கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரையான காலப்பகுதியில், ஜனாதிபதித் தேர்தல் பிரசார பணிகளுக்காக பிரதான வேட்பாளர்கள் மூவரும் ரூபா 3 பில்லியனுக்கும் அதிக பணத்தை செலவிட்டுள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நிலையம் (CMEV) மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சிகள், செய்தித்தாள்கள் உள்ளிட்டவற்றில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்காக மூன்று வேட்பாளர்களும் ரூபா 3,108 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக CMEV மதிப்பீடு செய்துள்ளது.
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற கண்காணிப்பு நிறுவனமான தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் (CMEV) தேர்தல் கண்காணிப்பு பிரசார செலவுகள் தொடர்பில் முதன் முறையாக ஆய்வை மேற்கொண்டு வரும் நிலையில், அதன் இறுதி அறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
அதற்கமைய கடந்த ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 10 வரை விளம்பரம் மற்றும் கூட்டங்களுகாக, மூன்று முக்கிய வேட்பாளர்கள் மேற்கொண்ட செலவுகளாக மதிப்பிடப்பட்ட செலவுகளை உத்தேசமாக கணக்கீடு செய்துள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது.
அந்தந்த ஊடக நிறுவனங்கள் விளம்பரங்களுக்காக அறவிடும் கட்டணங்களுக்கு ஏற்ப, வேட்பாளர்கள் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரங்களின் அடிப்படையில் இந்த தொகை மதிப்பிடப்பட்டுள்ளதாக CMEV தெரிவித்துள்ளது.
இந்த செலவினங்களில் சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், வானொலி மூலம் மேற்கொண்ட விளம்பர செலவுகள் உள்ளடக்கப்படவில்லை எனவும் எதிர்காலத்தில் அவற்றையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கண்காணிப்பு நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

