பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கிளிநொச்சி விஜயத்தின் முதல் கட்டமாக பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முதல் கட்டமாக நேற்று, கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதன் பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
அதனையடுத்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து சிகிச்சைப் பிரிவு பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்த பிரதமர், நிலைமைகளை நேரில் கண்காணித்தார்.
அதனையடுத்து, மயிலிட்டி கிராமத்தில் மீள்க்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் குடியிருப்புத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

