ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 09 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கண்டனம் தெரிவித்துள்ளதோடு , நோர்வே மற்றும் ஆப்கானிஸ்தான் என்பன கவலை வெளியிட்டுள்ளன.
09 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொழும்பு – 5 ஆம் வீதியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தின் பின்னர் வீட்டின் மீது தாக்குதல்களையும் மேற்கொள்ளத் தொடங்கினர்.
இதனால் பிரதமரின் இல்ல வளாகத்தில் பொலிஸார் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்த கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறிருப்பினும் அங்கிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து செல்லவில்லை.
இதனையடுத்து பிரதமரின் இல்லத்திற்கு தீ மூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியதோடு , தீப்பற்றியெறியும் காணொளி பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதன் போது பிரதமர் பிரத்தியேக இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த நூலகம் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பிரதமரின் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். காரணம் குறித்த வீட்டினை பிரதமர் கொழும்பு ரோயல் கல்லூரிக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினாலாகும்.
இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள சட்டத்தரணி என்.கே.அஷோக்பரன், ‘ரணில் விக்ரமசிங்க தனக்குப்பின்னர் தனது இல்லத்தை அரச பாடசாலையொன்றுக்கு வழங்கியிருக்கின்றார்.
அதுமாத்திரமன்றி அந்த இல்லத்திற்குள் பெறுமதியான புத்தகங்களுடன்கூடிய நூலகம் இருப்பதை அவரது நேர்காணல் காணொளிகளில் கண்டிருக்கிறோம். அத்தகைய இல்லத்திற்குத் தீவைப்பதென்பது மிகமோசமான குற்றச்செயலாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பதிவில் , ‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
ஒரு மோசமான அரசாங்கத்தை விரட்டி, மக்கள் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான இலக்கை அடைய போராட்டக்காரர்களுக்கு வன்முறை தேவையில்லை.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘அறவழிப் போராட்டத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியை பின்னடையச் செய்யும் வகையிலான தீ வைப்பு, கொள்ளையிடுதல் போன்ற வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம’ என்று ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டமை தொடர்பில் சர்வதேசமும் கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான நோர்வே தூதுவர் தனது டுவிட்டர் பதிவில் , ‘அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறி, பிரதமர் இல்லம் எரிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.
எந்தச் சூழலிலும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது. வன்முறை விரிவடைவதைத் தடுக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம். போராட்டக்காரர்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
‘வன்முறை , பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழிப்பது நியாயமற்றது. இலங்கையில் இதுபோன்று பொது ஒழுங்கை மீறுவது நாட்டின் பிரச்சினைகளை ஆழமாக்குகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளை பாதிக்கிறது. தேசிய ஒற்றுமை மற்றும் சர்வதேச உதவி மூலம் மட்டுமே தீர்வுகள் கிடைக்கும் ‘ என ஆப்கானிஸ்தான் தூதுவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.