பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசியில் பேசி உள்ளனர். சுமார் 30 நிமிடம் நடைபெற்ற தொலைபேசிப் பேச்சில் இருதரப்பு மற்றும் தெற்காசிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக பிரதமர் அலுவலக டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கிடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இம்ரான்கானை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில், இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்களின் வெறுப்பை கக்கும் அறிக்கைகள் மற்றும் வன்முறையை தூண்டுதல் ஆகியவை அமைதியை ஏற்படுத்த உதவாது என டிரம்பிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாத ஒழிப்பு, வன்முறையற்ற சூழலை உருவாக்குதல் மற்றும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை தடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ஒசாகாவில் ஜி 20 மாநாட்டின்போது டிரம்புடனான சந்திப்பையும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
வர்த்தகத்துறையில் இருதரப்புக்கும் நன்மை தரும் வகையில், இரு நாட்டு வர்த்தக அமைச்சர்களின் சந்திப்புக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை பிரதமர் மோடி வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் அலுவலக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது இரு நண்பர்களான இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோருடன் பேசியதாகத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வர்த்தகம், இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களுடன் பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மிக முக்கியமாக காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும் – பாகிஸ்தானும் இணைந்து செயல்படுவது குறித்து அப்போது பேசப்பட்டதாக டிரம்ப் கூறியுள்ளார். சிக்கலான நேரத்தில், இரு தலைவர்களுடனான பேச்சு சிறப்பாக அமைந்ததாகவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பிரதமர் மோடியுடான தொலைபேசிப் பேச்சுக்குப் பின்னர், அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருதி, இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை கக்கும் கருத்துக்களை தவிர்க்குமாறு இம்ரான்கானிடம் டிரம்ப் வலியுறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.