தமிழ்நாடு மற்றும் தமிழ்மொழி மீது பிரதமர் மோடிக்கு அளவு கடந்த பாசம் உண்டு என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “சம்ஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழைமையானது. அத்தகைய சிறப்புக்குரிய மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது’’ என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “ தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழி மீது பிரதமர் மோடிக்கு அளவு கடந்த பாசம் உண்டு. தமிழ் குறித்து வடமாநிலங்களை சேர்ந்த எந்த ஒரு அரசியல் தலைவரும் பிரதமர் மோடி போல் கூறியதில்லை. அவர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தமிழின் முதுமையை நிலைநாட்ட வேண்டும். காவிரி வழக்கின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை. திருப்தி மட்டுமே அளிக்கிறது’’ என்றார்.
அப்போது அ.தி.மு.க. விவகாரத்தில் பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்குப் பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் பிரதமர் மோடி, கட்சி விவகாரங்களில் தலையிடுவதில்லை. சொந்தக்கட்சி விவகாரத்திலேயே தலையிடாத பிரதமர், அடுத்த கட்சியிலா கட்டப்பஞ்சாயத்து செய்வார்?’’ என்று எதிர்க்கெள்வி எழுப்பினார்.