ஐக்கிய தேசியக் கட்சியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடவுள்ளார்.
அதற்கமைய நாளை இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி விஷேட நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஹர்ச டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதற்காக 7 நாட்களுக்குள் நாடாளுமன்ற மற்றும் செயற்குழு கூட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துமாறு ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அத்தோடு இந்த கோரிக்கையை முன்வைத்து 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் நேற்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இந்த விடயம் தொடர்பாக சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு பிரதமர் உறுதியளித்ததாக அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக எந்தவித கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.