தேர்தல் பிரசாரங்கள் தடை செய்யப்பட்ட அமைதிக் காலத்தில் விகாரைகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாயல்கள் என்பவற்றில் ஒரு வேட்பாளரை ஆதரித்து வழிபாடுகளை நடாத்த ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இவற்றிலிருந்து சமயத் தலைவர்கள் தவிர்ந்து கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சமய ஸ்தானங்களில் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு நல்லாசி வேண்டி வழிபாடுகளை நடாத்த வேண்டாம் என அறிவித்திருந்தும், அவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முறைப்பாடுகள் மற்றும் சாட்சிகள் என்பன குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பகுதி நேர வகுப்புக்களில் குறித்த ஒரு வேட்பாளரை ஆதரித்தும், அவர்களுக்கு வாக்குகளை வழங்குமாறும் பிரசாரம் நடைபெறுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதுபோன்று நடவடிக்கைகளை இந்த பிரசார சூன்ய காலத்தில் முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் ஆணைக்குழுத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

