இன்று பிரசவ தேதி கொடுக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்த இளம்பெண் மாயமானார். மூன்று நாட்களாக கணவர் அவரைத் தேடி வருகிறார்.
சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா தாய் சேய் மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புரசைவாக்கத்தை அடுத்த சூளை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (32). இருசக்கர வாகன மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இவரது அக்காள் மகள் காயத்ரிக்கும் (27) கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
6 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் கஸ்தூரி சமீபத்தில் கர்ப்பமானார். சந்தோஷத்தில் குடும்பமே துள்ளிக் குதித்தது. மாதா மாதம் சரியாக மருத்துவரிடம் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார் சுதாகர். காயத்ரியின் வீடு சேப்பாக்கத்தில் உள்ளது. அதனால் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு பொதுமருத்துவ மனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கும் நோக்கில் அங்கேயே மருத்துவப் பரிசோதனையும் செய்து வந்துள்ளனர்.
குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என தெரிவித்த மருத்துவர்கள் காயத்ரிக்கு டிச.17 (இன்று) பிரசவ தேதி என்று கொடுத்துள்ளனர். இதற்கிடையே கடந்த மாதம் காயத்ரிக்கு வளைகாப்பு நடத்தி சேப்பாக்கத்தில் உள்ள அவரது தாயார் வீட்டுக்கு மனைவியை அனுப்பியுள்ளார். 15-ம் தேதி வழக்கமான பரிசோதனைக்கு வந்துள்ளார்.
மருத்துவப் பரிசோதனை முடிந்த பின் காயத்ரி வளாகத்தில் வாக்கிங் சென்றுள்ளார். சுதாகர் மருத்துவ சோதனை அறிக்கை வாங்க மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்துள்ளார். அப்போது வாக்கிங் போன மனைவியைத் தேடியுள்ளார். ஆனால் அவரைக் காணவில்லை. மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடியபோதும் காயத்ரியைக் காணவில்லை.
மருத்துவமனை வளாகம் உட்பட பல பகுதிகளில் தேடியும் கஸ்தூரி கிடைக்காததால் மூன்று நாட்களாக பல மருத்துவமனைகளில் தேடியுள்ளனர். ஆனாலும் எங்கேயும் காயத்ரியைக் காணவில்லை. இதையடுத்து கணவர் சுதாகர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று தனது மனைவியைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
பிரசவ தேதிக்கு நெருங்கிய வேளையில் நிறைமாத கர்ப்பிணி காணாமல் போனது அவரது குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

