இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் கையளிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில், ஊடங்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
நாளை மறுதினம் (புதன்கிழமை) இவ்வறிவிப்பை விடுக்கவுள்ளதாக, ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது, நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.
பிணை முறி விவகாரம் அரசாங்கத்தில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் காணப்படும் விடயங்கள் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையிலேயே ஜனாதிபதியின் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.