“எம்முடைய இயக்கத்தில் தயாராகி மே 19ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் கதை மீது நால்வர் வழக்கு தொடுத்துள்ளனர்” என அப்படத்தின் நாயகனான விஜய் அண்டனி தெரிவித்திருக்கிறார்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.
இப்படத்தின் மூலம் விஜய் அண்டனி இயக்குநராகவும் தமிழ் திரையூலகில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் இவருடன் காவ்யா தாபர், டத்தோ ராதா ரவி, வை. ஜி. மகேந்திரன், தேவ் கில், மதுசூதன் ராவ், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பழனி வசனம் எழுதி இருக்கிறார். எக்சன் என்டர்டைனராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் எனும் பட நிறுவனம் மூலம் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பங்கு பற்றி பேசிய விஜய் அண்டனி, “இப்படத்தின் நாயகி அசலாகவே மாஸ் நாயகி. தாய்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எமக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து துணிச்சலாக எம்மை காப்பாற்றினார்.
விபத்தில் சுயநினைவு இழந்த நிலைக்கு சென்று விட்டேன். பிறகு சுயநினைவுக்கு வந்த போது மற்றவர்கள் அனைவரும் பதறிவிட்டார்கள். ஆனால் நான் இயல்பாக இருந்தேன். ஓய்வில் இருந்தாலும் எம்முடைய மடிக்கணினியை கேட்டு படம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டேன். அதன் பிறகு எம்முடைய முகத்தில் சத்திர சிகிச்சை செய்தனர். தற்போது இயல்பாக இருக்கிறேன். ஆனால் சிலர் எம்முடைய முகத்தின் தோற்றம் மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.
‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு இயக்குநரானது எதிர்பாராத விபத்து. இந்தப் படத்தை இயக்க வேண்டும் என திட்டமிடவில்லை. இந்த படத்தின் கதை மீது சிங்கப்பூரிலிருந்து ஒருவரும்.. சென்னை மற்றும் தமிழகத்திலிருந்து மூவரும் என மொத்தம் நால்வர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு கான்சொப்ட். இதனை இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னரும் எடுத்திருக்கிறார்கள். இத் திரைப்படத்திற்கு பின்னரும் எடுப்பார்கள்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் மே மாதம் 19 ஆம் திகதியன்று வெளியாகிறது. இந்தி மொழியில் மட்டும் ஒரு வாரத்திற்குப் பிறகு வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் ‘பிச்சைக்காரன் 2’ தயாராகி இருக்கிறது. அண்ணன் -தங்கை பாசத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நான் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறேனா? இல்லையா? என்பதனை உங்களுடைய ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.” என்றார்.