உலக சந்தையில், பால் மாவின் விலை அதிகரித்துள்ளதால், இறக்குமதியை கடந்த ஒரு வார காலமாக இடைநிறுத்தியுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித் தனர்.
3 ஆயிரத்து 250 தொடக்கம் 3 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு தொன் பால் மாவின் விலை, 3 ஆயிரத்து 400 தொடக்கம் 3 ஆயிரத்து 500 டொலர்கள் வரை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 100 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபை மற்றும் வாழ்க்கைச் செலவு குழுவிடம் தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பால்மா இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்படப்போகும் தட்டுப்பாடு தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரித்தமை, பால் மாவின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு ஆகிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டுச் சந்தையில் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு மாத்திரமே பால்மா கையிருப்பில் உள்ளதாகவும் அதன்பின்னர் தட்டுப்பாடு ஏற்படுமெனவும் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவின் விலையை குறைந்தது 75 ரூபாவிலாவது அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடமும் வாழ்க்கைச் செலவு குழுவிடமும் கோரிக்கை விடுப்பதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.