கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பெருந்தோட்டப் பாடசாலையொன்றில் ஏழு மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி பாடசாலையில் எட்டாம் வகுப்பில் பயிலும் இருவர், 9ஆம் வகுப்பில் பயிலும் இருவர், 10ஆம் வகுப்பில் பயிலும் மூவர் என ஏழு பேர் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு பதிவாகியுள்ளது. கொத்மலை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அதிபர் நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் அன்று கடமையில் இருந்த பதில் நீதவான் எஸ். மங்சவலகெதர சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மேற்படி பாடசாலையின் அதிபர் நீண்ட காலமாக மாணவர்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் வெளிவராத வகையில் இரகசியமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த அதிபரால் பல தடவைகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி தனது நண்பியிடம் விடயத்தை தெரிவித்ததையடுத்து குறித்த நண்பி பாடசாலை ஆசிரியரிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆசிரியை இத்தகவலை பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோரினால் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி முறைப் பாட்டையடுத்து குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண ஆளுனரை சந்தித்து கவனம் செலுத்துமாறுகேட்டுக்கொண்டார். விடயத்தை செவிமடுத்த ஆளுனர் கீர்த்தி தென்னகோன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆறுமுகன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.

