கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் இன்று (28) ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த தெரிவுக் குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சாட்சி பெற்றுக் கொள்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறு சட்ட மா அதிபர் ஊடாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையினால், பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் மீறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு அழைப்பு கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், அதில் ஆஜராவதா? இல்லையா? என்பது தொடர்பில் தான் யோசித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.