பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி 100 மில்லியன் ரூபா முதல் 150 மில்லியன் ரூபா வரையிலும் சிலவேளைகளில் இன்னும் சில உறுப்பினர்களின் பெறுமதி 500 மில்லியன் ரூபாவாகவும் விலைபோகும் நிலைமை ஏற்பட்டது எனவும் இதுவே பாராளுமன்றத்தைக் கலைக்க முக்கிய காரணமாகியது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி கொள்ளை அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள் அவற்றுடன் தொடர்பான விடயங்கள் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியதை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு அரசியல் நிலைமை சூடுபிடித்த பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெறுமதி நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் அவர்களாலேயே நிர்ணயிக்கப்பட்டது.
அது மிகவும் வருந்தத்தக்கதோர் நிலைமையாகும். உங்களது மதிப்பிற்குரிய வாக்குகளைப் பெற்று இந்த பாராளுமன்றத்திற்கு வந்திருக்கும் பிரதிநிதிகள் தமது வணிக பெறுமதியை அல்லது ஒரு விலையை நிர்ணயிப்பது எந்தளவிற்கு அரசியல் ரீதியில் மோசமான துரதிஷ்டமான நிலையாகும் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள்.
இதுவே பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ஜனாதிபதி நேற்றைய (11) தனது விசேட உரையில் கூறினார்.
பாராளுமன்றத்தைக் கலைக்க நேர்ந்த இரண்டாவது காரணி முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் அதிசயமான செயற்பாடாகும். அவரின் செயற்பாட்டையிட்டு நான் மிகவும் வருந்துகின்றேன்.
இரு தரப்பையும் சார்ந்த உறுப்பினர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்கள். ஊடகங்களில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பாரிய மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் மரணிக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள்.
அதை அவ்வாறு நடக்க விட்டிருப்பின் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டி அதனைக் கலைக்காது அந்த மோதலை உங்களதும் எனதும் அன்புக்குரிய இந்த தாய் நாட்டின் நகரங்களிலும் கிராமங்களிலும் மோதல்கள் ஏற்பட்டு நாட்டில் சாதாரண சிவில் மக்களுக்கிடையிலான மோதலாக பாரதூரமான நிலைமை ஏற்படும் என்பதை உணர்ந்தேன்.
சிறந்த ஜனநாயக ரீதியிலான அப்பொறுப்பினை பொதுமக்களிடம் கையளிப்பதன் மூலம் ஜனநாயகத்தின் உயரிய நோக்கங்களை அடையும் வகையிலேயே நான் பாராளுமன்றத்தைக் கலைத்து பொது தேர்தலை நடத்த தீர்மானித்தேன். அதன்மூலம் இப்போது ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினைக்கு தெளிவான நிலையான தீர்வு பொதுத்தேர்தல் மூலம் கிடைக்கப்பெறும் என்பதை இங்கு கூறவேண்டும்.
நாம் ஒரு புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்போம். அதேபோன்று ஊழல் மிக்கவர்களை அகற்றி அரச நிர்வாகத்திற்காக தூய்மையான பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது மதிப்புக்குரிய உங்களது பொறுப்பாகும். குறிப்பாக ஜனநாயக அடிப்படையில் மக்களின் கருத்துக்கு தலை வணங்கி பொதுத் தேர்தலை நடத்துவது அனைவராலும் பாராட்டப்படும் ஒரு முடிவாகும் என்றே நான் கருதுகின்றேன் எனவும் ஜனாதிபதி தனது நீண்ட உரையில் மேலும் குறிப்பிட்டார்.

