சபையில் உள்ள அக்கிராசன விவகாரமும், எதிர்வரும் புதன்கிழமை சூடுபிடிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அக்கிராசனத்துக்கு வருகைதந்தால், சபையிலிருந்து வெளிநடப்பு செய்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் தீர்மானித்துள்ளனர் என அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு, தகுதியில்லாத செயற்பாடுகளில் ஈடுபட்ட, திலங்க சுமதிபாலவுக்கு, எதிர்வரும் 4ஆம் திகதியன்று சபையை வழிநடத்துவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால், அது பக்கச்சார்பாகிவிடும் என்றும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் கரு ஜயசூரியவின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதற்கும் ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதெனத் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.
அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்கவுடன் இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கடந்த 27ஆம் திகதியன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட திலங்க சுமத்திபால, பிரதி சபாநாயகர் பதவிக்கு தகுதியில்லாத செயற்பாடுகளைச் செய்தார் என்றும் அந்த முன்னணி குறிப்பிட்டுள்ளது.
“இந்த விவகாரம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, சபாநாயகர் கரு ஜயசூரியவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ள சபைமுதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் கருஜயசூரிய தன்னிடம் தெரிவித்துள்ளார்” என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.