அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவில், தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில், தாக்குதலை மேற்கொண்ட பிரிதொரு மாணவன் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கல்முனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் இரு மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது , தாக்குதலுக்குள்ளான மாணவன் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய தம்பிலுவில் 2 பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய மாணவன் 09 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மாணவன் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் , நீதிமன்ற உத்தரவிற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கல்முனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.