இந்தியாவின் எல்லைக்குள் பிரவேசித்த பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான தாக்குதல் விமானமொன்றை இந்தியா இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்துவதற்காக காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டு போர் விமானமே இவ்வாறு இந்திய இராணுவத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இந்தியா மிக் 21 ரக போர் விமானம் ஒன்றை இன்றைய தினம் இழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளான விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த விமானம் தரையை நோக்கி வந்தபோது அதில் இருந்த விமானி பரசுட் மூலம் குதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் குறித்த எந்த தகவலும் இல்லையெனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய விமானப்படையின் 2 விமானங்களை பாகிஸ்தான் விமானப்படையினர் சுட்டு வீழ்த்திவிட்டதாகவும், இதிலிருந்த இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.