நசீம் ஷாவின் துல்லியமான பந்துவீச்சு, மொஹமடர் ரிஸ்வான், பாபர் அசாம், பக்கார் ஸமான் மூவரின் அரைச்சதத்தின் உதவியுடன், நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டு அணிகளும் பங்கேற்று வருகின்றன். இந்நிலையில், நேற்றைய தினம் (9) பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுக்களை இழந்த 255 ஓட்டங்களை குவித்தது.
துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பாக ஒருவர்கூட அரைச்சதம் அடிக்கவில்லை. மைக்கல் பிரேஸ்வெல் (43), டொம் லெதம் (42) 40 ஓட்டங்களைக் கடந்தனர்.
பந்துவீச்சில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளரான நசீம் ஷா 5 விக்கெட்டுககைளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர உஸாமா மிர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
சுமாரான ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 48.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 258 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 66 ஓட்டங்களையும், பக்கார் ஸமான் 56 ஓட்டங்களையும் விளாசினர்.
பந்துவீச்சில் மைக்கல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுக்களையும், டிம் செளத்தி,கிளென் பிலிப்ஸ் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன், இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டவாது போட்டி நாளை நடைபெறும்.