பாகிஸ்தானுக்கு ஸ்ரீலங்கா தானம் செய்த முப்பத்தையாயிரம் கண்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடையவையா என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கை இனவழிப்புப் போரின் இறுதியில் மாத்திரம் 50 சிறுவர்கள் உள்ளடங்கலாக 15ஆயிரம் பேர் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இறுதிப்போரில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் உள்ளடங்கலாக ஒன்றரை இலட்சம் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 1800 நாட்களைத் தாண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக அவர்களின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அண்மையில் இலங்கை பிரஜை பிரியந்த குமார பாகிஸ்தானில் மதவெறியர்களால் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் நியாய் புரோகி பாகிஸ்தானுக்கு இலங்கை முப்பத்தையாயிரம் கண்களை தானமாக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பாகிஸ்தானுக்கு ஸ்ரீலங்கா தானமாக அளித்த கண்கள் யாருடையவை என்று லங்கா அரசை நோக்கி கேள்வி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அவை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளினுடைய கண்களா என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கூறுகின்றனர்.
முப்பத்தையாயிரம் கண்கள் தொடர்பில் உண்மை வெளிக்கொணரப்பட்ட வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வலியுறுத்தி உள்ளதுடன் தமது உறவுகளின் விடுதலை மற்றும் நீதியைப் பெற சர்வதேசம் கண் திறந்து பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.