கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் சட்டரீதியான அமைப்புகளின் ஊழியர்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகத் பாலபதபெந்தி தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரச மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்கள் என்பவற்றின் ஊழியர்கள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

